டாஸ்மாக் கடையில் ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை

சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் டாஸ்மாக் மதுபான கடையில் ஊழியர்களை மிரட்டி ரூ. 2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.;

Update: 2017-07-31 21:45 GMT

மானாமதுரை,

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களையொட்டி 100 மீட்டர் தூரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் நீதிமன்ற தடையை அடுத்து மூடப்பட்டன. இதில் மானாமதுரையைச் சுற்றியுள்ள 15–க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. கிராமப்புற சாலைகளை ஒட்டி உள்ள கடைகள் மட்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன.

முத்தனேந்தலில் இருந்து கட்டிகுளம் செல்லும் பாதையிலும் டாஸ்மாக் கடையும் ஒன்று செயல்பட்டு வருகிறது. சாதாரண நாட்களில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. இந்நிலையில் சுற்றுவட்டார கடைகள் மூடப்பட்டதால் இங்கு நாள்ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக ஊழியர்கள் ரவி, முருகேசன் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பீர் கேட்டுள்ளனர். பீர் பாட்டில் எடுக்க ஊழியர்கள் திரும்பியபோது 2 பேரும் கடைக்குள் புகுந்து கத்தி, வீச்சரிவாளை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் விற்பனையாளர்களின் செல்போனையும் பறித்து கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

அதன்பின் கடைக்கு சரக்கு வாங்க வந்த நபரிடம் போன் வாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உடனே வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்