மதுக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு, கலெக்டரிடம் முறையீடு

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2017-07-31 22:00 GMT
ராமநாதபுரம்,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மெல்ரின் என்பவரின் மனைவி மாயி சாந்திலின் என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் கடந்த மே மாதம் 11-ந்தேதி வேலை நிமித்தமாக மண்டபம் சென்றுவிட்டு பாம்பன் பாலம் வழியாக திரும்பி வந்த போது அரசு பஸ் மோதி இறந்துவிட்டார். இதுதொடர்பாக பாம்பன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எனது கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளை வைத்து வளர்ப்பதற்கு மிகுந்த சிரமமடைந்து வருகிறேன். எனது கணவரின் ஆயுள் காப்பீடு பணம் கிடைப்பதற்கு விண்ணப்பித்தபோது விபத்துக்குள்ளாக்கிய அரசு வாகனத்தின் பதிவு எண் கேட்கின்றனர். இந்த பதிவு எண் தெரிந்தும் முதல்தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. இதனால் எனது கணவரின் ஆயுள் காப்பீடு நிதியை பெற முடியாமல் குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மாவட்ட எருதுகட்டு விழா பேரவை தலைவர் ஆதித்தன் அளித்த மனுவில், கீழக்கரை தாலுகா காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் பகுதியில் வரும் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி 16-ந்தேதி வடமாடு எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10 காளைகள் பங்கேற்க உள்ளன. விழாவிற்கு அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மனுகொடுத்தார்.

சூரங்கோட்டை ஊராட்சி அனைத்து கிராம ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாலசுந்தரமூர்த்தி தலைமையில் ஏராளமானோர்வந்து அளித்த மனுவில், பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட 3 மதுக்கடைகளை எங்கள் பகுதியில் அமைத்துள்ளனர். மேலும், புதிதாக தற்போது ஒரு மதுக்கடை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த மதுக்கடைகளால் எங்கள் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருவதோடு, பொதுமக்கள், மாணவிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எ்னவே உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று கூறியிருந்தனர். பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

செங்குடி மற்றும் புல்லமடை பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக் கோரி கலெக்டரிடம் பாஸ்கரன், ராமு ஆகியோர் தலைமையில் வந்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்