ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயில் தடம் புரண்டது
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று யார்டு பகுதியில் 6 காலி சரக்கு ரெயில் பெட்டிகள் என்ஜினுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று யார்டு பகுதியில் 6 காலி சரக்கு ரெயில் பெட்டிகள் என்ஜினுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிக்கு அந்த காலி பெட்டிகளை எடுத்து செல்வதற்காக பிரித்து எடுத்து, சரக்கு ரெயில் பெட்டிகளுடன் இணைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
அதற்காக அந்த ரெயில் என்ஜின் காலி பெட்டிகளுடன் யார்டில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே கேட் நோக்கி மாலை 5 மணிக்கு பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினை தவிர 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன.
தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இப்பணி நடந்து கொண்டிருக்கிறது.
யார்டு பகுதியில் தடம் புரண்டதால், மற்ற ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் ரெயில்கள் இயங்கின.