ஆரணி பகுதியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்

ஆரணி பகுதியில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல், போக்குவரத்து பாதிப்பு.

Update: 2017-07-31 00:00 GMT

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பகுதிக்கு சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடக்குநல்லூர் ஊராட்சியில் இருக்கும் துரைநல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. ஆரணியில் உள்ள 15–வது வார்டு பகுதிக்கு குறைந்த அழுத்த மின்சாரமே கிடைக்கிறது. இதனால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைவதாக தெரிகிறது. அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது

மேலும், மின்தடை ஏற்பட்டதற்கு காரணம் என்ன? எப்போது மீண்டும் மின்வினியோகம் செய்யப்படும் என்று கேட்க ஆரணி தோட்டக்கார தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு போன் செய்தால் உரிய பதில் கூறுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பலமுறை மின்தடை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புதுவாயல்–பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி தோட்டக்கார தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்சாரம் கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று கூறினர். இதனால் துணை மின் நிலையத்துக்கு போலீசார் போன் செய்து போக்குவரத்து பிரச்சினையை எடுத்து கூறினர். இதையடுத்து உடனடியாக மின்வினியோகம் வழங்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் ஏராளமான பொதுமக்கள் ஆரணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய ஊழியர்கள் யாரும் வரவில்லை.

வழக்கம் போல் மீண்டும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம். வாகனங்களை செல்ல அனுமதியுங்கள் என்று போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் இரவு 9 மணி முதல் 1 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்