மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக்கோரி குடிமகன்கள் சாலை மறியல்

கன்னியாகுமரியில் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க குடிமகன்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-30 23:00 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் 4 டாஸ்மாக் கடையும், மெயின்ரோட்டில் கிளப் வசதி கொண்ட ஒரு மதுபான கடையும், 10–க்கும் மேற்பட்ட லாட்ஜூகளில் பார்களுடன் கூடிய மதுக்கடையும் இயங்கி வந்தது. இந்தநிலையில் நெடுஞ்சாலையோரம் இருக்கும் மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து குமரி மாவட்டத்திலும் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நடவடிக்கையால் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இயங்கி வந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

இதைதொடர்ந்து கன்னியாகுமரியில் மதுக்கடைகளே இல்லாத சுற்றுலா தலமாக மாறியது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள மதுபிரியர்கள் அனைவரும் அஞ்சுகிராமம், கொட்டாரம் பெரியவிளை, மணக்குடி போன்ற பகுதிகளுக்கு சென்று மது அருந்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 5.15 மணியளவில் கன்னியாகுமரியில் உள்ள மதுபிரியர்கள் அனைவரும் மெயின்ரோட்டில் உள்ள மூடப்பட்ட கிளப் வசதியுடன் கூடிய மதுக்கடை முன்பு திரண்டு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் எபனேசர், லாசர், பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட குடிமகன்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உடனே குடிமகன்கள் கூறுகையில், கன்னியாகுமரியில் மதுக்கடை இல்லாததால் குடிப்பதற்காக 8 கிலோ மீட்டர் தூரம் சென்று வருகிறோம். இது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மெயின்ரோட்டில் மூடப்பட்ட கிளப் வசதியுடன் கூடிய மதுக்கடையை மட்டும் மீண்டும் திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே பேச்சுவார்த்தை நடந்த கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடிமகன் திடீரென்று சுற்றுலா பயணிகள் காரின் அடியில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கிளப் வசதியுடன் உள்ள அந்த மதுக்கடைக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த கடையை திறக்க அனுமதி அளித்தனர். மதுக்கடை திறக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட குடிமகன்கள் உற்சாகத்துடன் கலைந்து சென்றனர்.

நேற்று மதுபாட்டில்கள் கடையில் இல்லாததால் விற்பனை நடைபெறவில்லை. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் மதுவிற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் மதுபிரியர்கள் கடையை திறக்கவேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்