மத்திய ரெயில்வே மந்திரிக்கு, சித்தராமையா கடிதம்

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிவுக்கு முதல்–மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.;

Update: 2017-07-29 22:03 GMT

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு முதல்–மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு முதல்–மந்திரி சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:–

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடங்குவது தொடர்பாக மத்திய ரெயில்வே துறையும், கர்நாடக அரசும் கடந்த 2016–ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டுவது, நிலங்களை கையகப்படுத்துவது, லாபம் மற்றும் நஷ்டங்களை கர்நாடக அரசும், ரெயில்வே துறையும் சரி சமமாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 12–ந் தேதி கர்நாடக அரசு தனது கோரிக்கைகளை மத்திய ரெயில்வே துறையிடம் தெரிவித்து இருந்தது.

இந்த திட்டத்திற்காக தனியாக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க முடியாது என்றும், ஏற்கனவே உள்ள வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு சார்பில் ரெயில்வே துறையிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் கடந்த ஏப்ரல் மாதம் 18–ந் தேதி பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை அறிவித்தது.

கர்நாடக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமலேயே தன்னிச்சையாகவும், ஒருதலைபட்சமாகவும் முடிவு எடுத்து மத்திய ரெயில்வே துறை, இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது. இவ்வாறு மத்திய ரெயில்வே துறை அறிவித்து இருப்பதால் புறநகர் ரெயில் திட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டால், அதனை மாநில அரசே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பெங்களூரு புறநகர் ரெயில் சேவைக்கான கட்டணத்தை ரெயில்வே துறையே தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. எனவே பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டால் கர்நாடக அரசு தான் பொறுப்பு, கட்டணத்தை ரெயில்வே துறையே தீர்மானிக்கும் என்பதை மத்திய ரெயில்வே துறை நீக்க வேண்டும்.

இந்த திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் கோரிக்கைகளை மத்திய ரெயில்வே துறை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. வருங்காலத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதுடன் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசல் பிரச்சினை அதிகரிக்கக்கூடும். அதனால் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் குறித்து கர்நாடக அரசின் கோரிக்கைகளை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்