ஈரோடு சாமியப்பா நகரில் டாஸ்மாக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு சாமியப்பா நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;

Update:2017-07-25 04:00 IST

ஈரோடு,

ஈரோடு சாமியப்பா வீதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் மனு கொடுப்பதற்காக நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக்கடை பாரில் வைத்து 6 பேர் கொண்ட கும்பலை சேர்ந்தவர்கள் வாடகை கார் டிரைவர் ஒருவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு பெரியவலசு நால்ரோடு பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மாணிக்கம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள சாமியப்பா நகரில் திறக்க தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பகுதியில் 600–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு பள்ளிக்கூடம் மற்றும் கோவில்கள் உள்ளன.

எனவே சாமியப்பா நகரில் டாஸ்மாக் கடை அமைத்தால் குடிமகன்களின் தொந்தரவால் பெண்கள், மாணவ –மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே ஈரோடு சாமியப்பா நகரில் டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு சென்று மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்