ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபட்டனர்.

Update: 2017-07-23 22:45 GMT
தூத்துக்குடி,

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். தூத்துக்குடி துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை பகுதிக்கு நேற்று அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் வந்து குவிந்தனர். அவர்கள் தங்களின் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கடலில் புனித நீராடினர். இதனால் தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் பொதுமக்கள் பலர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். தற்போது தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய டிரம்மில் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாடு, கருங்குளம் பகுதி மக்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நேற்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் குவிந்தனர். அதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிகுளம் கடற்கரை பகுதியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலையில் இருந்தே தர்ப்பணம் கொடுத்தனர். 

மேலும் செய்திகள்