இறைச்சி கடைக்குள் இளம் பெண் கழுத்தை அறுத்து படுகொலை

இறைச்சி கடைக்குள் இளம் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2017-07-23 21:00 GMT

பாலக்காடு

மலப்புரம் மாவட்டம் பரப்பன் அங்காடியை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 37). இவர் அப்பகுதியில் இறைச்சி கடையை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரபீனா (30). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை 4 மணியளவில் கடையை திறக்க கணவன்–மனைவி 2 பேரும் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் காலை 10 மணி ஆகியும் கடை திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கடையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ரபீனா கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் தானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கடையின் பூட்டை உடைத்து ரபீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், நிஜாமுதீன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. ஆனால் எதற்காக கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நிஜாமுதீனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்