உரம் விற்பனை செய்வதற்கான புதிய கருவி செயல்பாட்டுக்கு வந்தது கலெக்டர் தொடங்கி வைத்தார்

உரம் விற்பனை செய்வதற்கான புதிய கருவியின் செயல்பாட்டினை கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார்.

Update: 2017-07-22 22:30 GMT

திருச்சி,

திருச்சி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரம் விற்பனைக்கான புதிய விற்பனை முனை கருவியின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு எளிதான முறையில், சரியான விலையில் முக்கியமாக இடுபொருட்களை வழங்கும் வசதிக்காக விற்பனை முனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்வதற்கு புதிய விற்பனை முனை கருவி மூலம் பட்டியலிடும் போது விவசாயியின் பெயர், ஆதார் எண் வைத்து போடுவதால் தமிழ்நாட்டில் எவ்வளவு விவசாயிகள் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு உரம் மானிய விலையில் வாங்குகிறார்கள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த எந்திரம் வைத்து ரசீது போடுவதால் சில்லரை மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் உள்ள உர இருப்பை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கலாம்.

குறுவை பருவம் தொடங்கி உள்ளதால், இப்போது விற்பனையாகும் உரங்களில் விவசாயிகளுக்கு மானியத் தொகை எவ்வளவு அளிக்கப்பட்டடுள்ளது என்ற விவரம் அறிய ஏதுவாக இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் உரம் கிடைப்பதால், விவசாயிகள் உபயோகிப்பது எளிதாக இருக்கும். வட்டார வேளாண்மை அலுவலர்கள் இதனை விரைவில் கற்றுக்கொண்டு உபயோகிப்பதால், பழைய முறையில் உரம் ஆரம்ப இருப்பு எவ்வளவு, விற்பனையானது எவ்வளவு, வரவு எவ்வளவு என்று உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். முதன் முதலில் இருப்புகளை எந்திரத்தில் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலர்கள் ஏற்ற வேண்டும். 321 தனியார் விற்பனையாளர்கள், 147 கூட்டுறவு சில்லரை விற்பனையாளர்கள் என மொத்தம் 468 விற்பனையாளர்களுக்கு விற்பனை முனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உதுமான்முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர்(உரங்கள்) சங்கர், மத்திய உரத்துறை தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அருண், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ரவி, மண்டல மேலாளர் சிவசங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்