சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சப்பணம் கைமாறியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி கைமாறியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2017-07-22 21:30 GMT

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி கைமாறியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வங்கி கணக்குகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சசிகலா சிறையில் அடைப்பு

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறையில் இவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ.2 கோடி கைமாறியதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த பணம் எப்படி கைமாறியது? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது.

முன்னாள் மந்திரியின் உதவியாளர்

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் இடைத்தரகர்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மல்லிகார்ஜூனாவின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் வி.சி.பிரகாசிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் வி.சி.பிரகாசுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட டெல்லி போலீசார் அவரை கடந்த ஏப்ரல் மாதம் பிடித்து சென்று விசாரித்தனர். விசாரணையின்போது, தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க அ.தி.மு.க. (அம்மா) அணி முன்வந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஹவாலா முறையில்

தொடர் விசாரணையில் வி.சி.பிரகாஷ் உதவியுடன் துமகூருவை சேர்ந்தவரும், ஆஸ்திரேலியாவில் தொழில் செய்து வரும் பரமேஸ்வரின் நண்பருமான ஒருவர் மூலம் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக ரூ.2 கோடி ஹவாலா முறையில் கைமாறியுள்ளதாக தெரிய வந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான வங்கி கணக்குகள், ஆவணங்களும் சிக்கி இருப்பதாகவும் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

சிறை முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் யார்–யாருக்கு லஞ்சப்பணம் கைமாறியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகலாம். உயர்மட்டக்குழு தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை நாளை(திங்கட்கிழமை) தாக்கல் செய்யலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்