மாவட்டத்தில் 29 ஆயிரம் அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும்

மாவட்டத்தில் 29 ஆயிரம் அரசு ஊழியர்களின் பணிபதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் கருவூல கணக்குத்துறை ஆணையர் தகவல்

Update: 2017-07-22 22:00 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள 29 ஆயிரத்து 423 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் என கடலூரில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கருவூல கணக்குத்துறையின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்கும் திட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கருவூல கணக்குத்துறையின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:–

நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெறுவதற்கு மாநில நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலண்மை திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்காக ரூ.2 கோடியே 88 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இதை செயல்படுத்துவதற்காக திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளும், மென்பொருளை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மாநில நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையதளத்தின் மூலம் சம்பளப்பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். மேலும் இத்திட்டத்தில் அரசின் வருவாயை இணையதளம் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ்நேர வரவினை உடனுக்குடன் அறிய இயலும்.

மாநில நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலண்மை திட்டத்தின் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் உடனுக்குடன் அரசுக்கு கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும், தேவையற்ற காலதாமதம் முறைகேடுகளும் தவிர்க்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். முதல் கட்டமாக கடந்த 2016–ல் சென்னை, ஈரோடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிப்பதிவேடு கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதர மாவட்டங்களிலும் பணி விரிவாக்கம் செய்யப்பட்டு, வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசுப்பணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருந்து ஓய்வுபெறும் வரை உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது. இதன் மூலம் பணிப்பதிவேடுகளை பராமரிக்கும் பணியில் இருந்து விடுபட்டு அலுவலர்கள் தங்களது துறையின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட முடியும். இதனால் பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப்பதிவேடுகள் மாற்றப்படுவதால் ஏற்படும் கால விரயம் குறைவதோடு, பணிப்பதிவேடு காணாமல் போகக்கூடிய சூழ்நிலையும் முடிவுக்கு வரும்.

பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும். ஆதாரப்பூர்வமான பணிவிபரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 29 ஆயிரத்து 423 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளும் கணினிமயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, சென்னை மண்டல இயக்குனர் திருஞானசம்பந்தம் மற்றும் நேர்முக உதவியாளர்(கருவூலகட்டுப்பாடு) புவியரசு, கடலூர் கருவூல அலுவலர் கோபிநாத், கூடுதல் கருவூல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்