உத்திரமேரூர் அருகே பயங்கரம்: பெண் போலீசாரின் தந்தை வெட்டிக்கொலை
உத்திரமேரூர் அருகே பெண் போலீசாரின் தந்தை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 68). விவசாயி. இவருக்கு ரோசம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் அல்லிராணி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராகவும், 2–வது மகள் கண்ணகி திருக்கழுக்குன்றத்தில் பெண் போலீசாகவும் பணிபுரிகிறார். மகன் கணபதி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரிகிறார். அஞ்சலி என்ற திருமணமாகாத மகள் உள்ளார்.
வெட்டிக்கொலை
சந்திரசேகரன் நேற்று முன்தினம் மாலை கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருப்புலிவனம் வனப்பகுதியில் சந்திரசேகரன் வெட்டிக்ச்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது உடல் கிடந்த காட்டுப்பகுதியில் இருந்து திருப்புலிவனம் அரசு கல்லூரி வரை சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
காரணம் என்ன?
இதுகுறித்து சந்திரசேகரனின் மனைவி ரோசம்மாள் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் திருப்புலிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.