பெண்களிடம் தகாதமுறையில் நடந்த சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புதுப்பட்டினம் மீனவ பஞ்சாயத்தார் புகார் கொடுத்துள்ளனர்.;
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் ஒருவர் நேற்று முன்தினம் கல்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டினம் மீனவர் குப்பத்திற்கு சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள சாராய வியாபாரியின் விலாசத்தை அவர் விசாரித்ததாக தெரிகிறது. அந்த நபர் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என அப்பகுதி பெண்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அந்த பெண்களை சப்–இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் திரண்டு கல்பாக்கம் போலீஸ் நிலையம் முன் கூடினர். பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புதுப்பட்டினம் மீனவ பஞ்சாயத்தார் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.