தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர தேதி நீட்டிப்பு அடுத்த மாதம் 10–ந் தேதி கடைசிநாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் 10–ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-07-22 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மாதம் 10–ந் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநீட்டிப்பு

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசு ஐ.டி.ஐ.க்கள் மற்றும் தனியார் ஐ.டி.ஐ.க்களில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10–ந் தேதி வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. 8 மற்றும் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் அவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின் படி மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் அதே இணையதளத்தில் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின் படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கோரம்பள்ளம், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வின் போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், அசல் மாற்றுச் சான்றிதழ், 8–ம் வகுப்பு, 10–ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், அசல் சாதிச் சான்றிதழ், சிறப்புநிலை முன்னுரிமை இருப்பின் அதற்கான அசல் சான்று உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல வேண்டும்.

சலுகைகள்

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில், மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500, பஸ்பாஸ் வசதி, இலவச சைக்கிள், லேப்டாப், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், 2 செட் சீருடைகள், 1 செட் காலணி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 0461–2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்