கோத்தகிரி அருகே தீவிரவாத தடுப்பு சிறப்பு முகாம்

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை கிராமத்தில் தீவிரவாத தடுப்பு மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2017-07-22 22:00 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்கவும், பழங்குடியின மக்களிடம் இருந்து உதவிகள் பெறுவதை தடுக்கவும், பழங்குடியின மக்கள் மாவோயிஸ்டுகள் இயக்கத்தில் சேர்வதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவோயிஸ்டுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறை சார்பில் ஆதிவாசி கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு வசதிகள் செய்து தரப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை கிராமத்தில் தீவிரவாத தடுப்பு மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் குஞ்சப்பனை ஆதிவாசி கிராம சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆயத்தீர்வை உதவி தாசில்தார் மகேஸ்வரி, சிறப்பு திட்ட தாசில்தார்கள் தனபாக்கியம், இந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பூங் கொடி, மேல் குன்னூர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், நெடுகுளா வட்டார மருத்துவ அலுவலர் ஸ்மித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. அப்போது வனப்பகுதி மற்றும் ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யக் கூடாது. உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதில், பழங்குடியின மக்களிடம் இருந்து 100– க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதை யடுத்து முகாமில் கலந்து கொண்ட ஆதிவாசி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆதிவாசி மக்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் குஞ்சப்பனை, மந்தகரை, புதிகரைபுதூர் உள்பட 10– க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்