தமிழக எல்லை பகுதியில் பிரச்சினைக்குரிய இடத்தை பார்வையிட்ட கேரள மந்திரி

தமிழக எல்லை பகுதியில் பிரச்சினைக்குரிய இடத்தை கேரள மந்திரி ராஜூ நேற்று பார்வையிட்டார்.

Update: 2017-07-22 22:30 GMT

கம்பம்,

கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு பகுதி தமிழக, கேரள எல்லையாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லைப்பகுதிக்குள் கேரள கலால் மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து கன்டெய்னர் பெட்டி ஒன்றை வைத்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக வனத்துறையினருக்கும், கேரள போலீசாருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டது.

பின்னர் இருமாநில போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தமிழக, கேரள எல்லைப்பகுதியை தீர்மானிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரு மாநில அதிகாரிகளும் கூட்டாக இணைந்து எல்லை பகுதியில் நில அளவீடு பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் இரு மாநில அதிகாரிகளும் இணைந்து நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். அப்போது மந்திப்பாறை நாவல் பள்ளம் என்ற இடத்தில் இருந்து கல்லுவேலி எஸ்டேட் பகுதி வரை அளவீடு செய்யப்பட்டு தமிழக, கேரள எல்லைப்பகுதியில் எல்லைக்கற்களும் நட்டு வைக்கப்பட்டன. அப்போது தமிழக எல்லைக்குட்பட்ட பகுதிகளை கேரள அரசும், தனிநபர்களும் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.

அதன் பின்னர் அளவீடு பணி மேற்கொள்வதில் கேரள அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுக்கு முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக எல்லைப்பகுதியில் நடப்பட்ட எல்லைக்கற்களை சிலர் அகற்றினர்.

இது ஒருபுறம் இருக்க, நேற்று கேரள வனத்துறை, பால்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை மந்திரி ராஜூ இடுக்கி மாவட்டம் செல்லார்கோவில், நெட்டிதொழு, புத்தடி ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டுறவு சங்க திறப்புவிழாவில் கலந்துகொள்வதற்காக வந்தார். அவரிடம் கர்ணாபுரம் பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இருமாநில எல்லைப்பிரச்சினை குறித்து கூறினர். இதையடுத்து தமிழக எல்லைப்பகுதிக்கு மந்திரி மற்றும் அரசியல் கட்சியினர் சென்றனர். தொடர்ந்து பிரச்சினைக்குரிய இடத்தை பார்வையிட்ட மந்திரி, தமிழக போலீசாரிடம் அது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் சோதனை சாவடி அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை பார்வையிட்ட மந்திரியிடம் அங்கு வந்த பொதுமக்கள் தங்கள் பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மந்திரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக தமிழக பகுதிக்கு மந்திரி வருவது குறித்த தகவல் கிடைத்ததும், சோதனை சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்