பெண் கத்தியால் குத்திக்கொலை வாலிபருக்கு வலைவீச்சு

வேட்டவலம் அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-07-22 21:15 GMT

வேட்டவலம்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த நா.கெங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜோஸ்பின் இமாகுலேட் (வயது 39). கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு மேரிசுஜி என்ற மகளும், ஜோவன் என்ற மகனும் உள்ளனர். மேரிசுஜி வேலூரில் உள்ள கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். ஜோவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மரியஜோசப் மகன் சார்லஸ் (25). ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோஸ்பின் இமாகுலேட் திருவண்ணாமலையில் இருந்து நா.கெங்கப்பட்டு கிராமத்திற்கு மொபட்டில் வந்தபோது, சார்லஸ் வழிமறித்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து ஜோஸ்பின்இமாகுலேட் அவரது அண்ணன் வின்சென்ட் ஜீனாரவியிடம் தெரிவித்துள்ளார். அவர், சார்லசை கண்டித்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சார்லஸ் நேற்று முன்தினம் இரவு ஜோஸ்பின் இமாகுலேட் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது வீட்டில் மகனுடன் தூங்கி கொண்டிருந்த ஜோஸ்பின் இமாகுலேட்டை, சார்லஸ் கத்தியால் நெற்றியில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேட்டவலம் போலீசார் மற்றும் திருவண்ணாமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சார்லசை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்