ஆம்பூர் அருகே விபத்து லாரிகள் மோதல்; 3 டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி

ஆம்பூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 டிரைவர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள்.

Update: 2017-07-22 21:15 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 டிரைவர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சென்னையில் இருந்து மைசூருக்கு ராட்சத பைப் குழாய் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்றது. லாரியை, திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பாப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 42) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக முசிறி தாலுகா கோணாப்பம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (47) என்பவர் உடன் வந்தார்.

லாரி, வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற காரின் டயர் பஞ்சர் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் கார் மீது மோதாமல் இருக்க லாரியை டிரைவர் பாலசுப்பிரமணி திருப்பியபோது அவரது கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது லாரி ஏறி பெங்களூரு – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.

அப்போது சேலத்தில் இருந்து குடியாத்தத்துக்கு மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரியும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 2 லாரிகளின் கேபின்களும் ஒன்றோடு, ஒன்றாக இணைந்து பாலாற்றின் தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த பாலசுப்பிரமணி, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களது உடல்கள் கண்டெய்னர் லாரிக்குள் சிக்கிக் கொண்டது.

மேலும் இந்த விபத்தில் மாட்டு தீவனம் ஏற்றி வந்த வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் முனீர்அஹமத் (44), கிளீனர் சையத் பாரூக் (49) ஆகிய 2 பேரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கும், ஆம்பூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், தாலுகா போலீசாரும் அங்கு வந்து கண்டெய்னர் லாரிக்குள் சிக்கிய 2 டிரைவர்களையும் மீட்க முயன்றனர். ஆனால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து கடப்பாரை கம்பியால் இடித்தும், கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தியும் ராஜேந்திரன் உடலை மீட்டனர். பாலசுப்பிரமணியின் உடலை மீட்க முடியவில்லை.

விபத்துக்குள்ளான 2 லாரிகளின் கேபின்களும் ஒன்றோடு, ஒன்றாக ஒட்டிக்கொண்டது. இதனால் உடனடியாக மீட்பு பணியை தொடங்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து ஆம்பூரில் இருந்து 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. லாரிகளை, கிரேன்கள் மூலம் பிரிக்கும் போது தீவிபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் 2 லாரிகளின் கேபின்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

பின்னர் கிரேன்கள் உதவியுடன் மாட்டு தீவனம் ஏற்றி வந்த லாரி பிரித்து எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியின் உடல் மீட்கப்பட்டது. விபத்து நடந்த இடம் தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு – சென்னை சாலையின் பகுதியில் ராட்சத பைப் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி நின்றுவிட்டதால் அவ்வழியாக எந்தவித வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

காலை 7 மணிக்கு நடந்த இந்த விபத்தால் 11 மணி வரை அச்சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் சென்னை – பெங்களூரு சாலையில் வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். இதனால் சுமார் 4 மணி நேரம் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தனசேகரன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்