முகநூலில் அறிமுகமான 2 பேரிடம் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபர்

முகநூலில் அறிமுகமான 2 பேரிடம், உதவி இயக்குனர் எனக்கூறி சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றிய ஈரோடு வாலிபரிடம் திண்டுக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2017-07-22 06:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 28), கன்னிவாடியை சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் (29) ஆகியோர், நேற்று திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு ஈரோட்டை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து வந்து ஒப்படைத்தனர். சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தங்களை ஏமாற்றி விட்டதாக 2 பேரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதுபற்றி போலீசார் கூறுகையில், பிரபுராஜ் மற்றும் விக்னேஷ் பாண்டியன் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் இவர்களுக்கு, ஈரோடு வாலிபர் அறிமுகமாகி இருக்கிறார். அப்போது அவர் தான் சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு வாங்கி தருவதாக...

மேலும், சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்கள் சிலரின் பெயரை கூறி தனக்கு தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார். பின்னர் பிரபுராஜ்க்கு சினிமாவில் நடிப்பதற்கும், விக்னேஷ் பாண்டியனுக்கு உதவி இயக்குனர் வாய்ப்பும் பெற்றுத் தருவதாக கூறினார். அதை உண்மை என நம்பிய 2 பேரும், அவருடன் சென்னை சென்றுள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களுக்கு 2 பேரையும் அழைத்து சென்றார். இதற்காக அவருக்கு, 2 பேரும் செலவு செய்துள்ளனர். ஆனால், 2 பேருக்கும் சினிமாவில் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதற்கிடையே உதவி இயக்குனர் என கூறி அவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும், அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தெற்கு போலீசார் அந்த நபரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்