லோனவாலாவில் நீர்வீழ்ச்சி பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி அந்தேரியை சேர்ந்தவர்

லோனவாலாவில் நீர்வீழ்ச்சி பள்ளத்தில் தவறி விழுந்து அந்தேரியை சேர்ந்த வாலிபர் பலியானார்.

Update: 2017-07-21 22:39 GMT

மும்பை,

லோனவாலாவில் நீர்வீழ்ச்சி பள்ளத்தில் தவறி விழுந்து அந்தேரியை சேர்ந்த வாலிபர் பலியானார்.

நீர்வீழ்ச்சியில் குளியல்

சுற்றுலா தலமான லோனவாலாவில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில், மும்பை அந்தேரியை சேர்ந்த விஜய் பர்மார்(வயது26) என்ற வாலிபர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து அங்குள்ள டைகர் பாயிண்ட் அருகில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அங்கு அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். அப்போது, அவர்கள் மலைப்பாறையின் மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதில், திடீரென கால் வழுக்கியதில் விஜய் பர்மார் நீர்வீழ்ச்சியின் கீழே உள்ள பெரிய பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.

சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உதவிகேட்டு கூச்சல் போட்டனர். தகவல் அறிந்து லோனாவாலா போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் அவரை மீட்டனர். பின்னர் உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்