பழ வியாபாரியின் ஆட்டோவை தீ வைத்து எரித்த முதியவர் கைது
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் பழ வியாபாரியின் ஆட்டோவுக்கு தீ வைத்த முதியவர் கைது.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், காமாட்சி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், காட்டுப்பாக்கத்தில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். சொந்தமாக ஆட்டோவும் வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் இருந்து வியாபாரத்துக்கு தேவையான பழங்களை வாங்கி விட்டு தனது ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். பழங்களுடன் ஆட்டோவை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று தூங்கி விட்டார்.
சிறிது நேரத்தில் அவரது ஆட்டோ தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தார். தீ விபத்தில் ஆட்டோவின் மேல் பகுதி மற்றும் அதில் இருந்த பழங்கள் தீயில் கருகியது.
இது குறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் காட்டுப்பாக்கம், ஸ்டாலின் நகர், 2-வது தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி(63) என்பவர்தான் ஆட்டோவுக்கு தீ வைத்ததும், பழ வியாபாரி அண்ணா மலையிடம் பணம் கேட்டதாகவும், அதற்கு அவர் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ஆட்டோவுக்கு தீ வைத்ததும் தெரிந்தது. சுப்பிரமணியை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.