பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி

Update: 2017-07-21 21:30 GMT

நெல்லை,

பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினர். வேளாண்மை துறை இணை இயக்குனர் கனகராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியவுடன், விவசாயிகள் எழுந்து நின்று பயிர் காப்பீட்டு திட்டத்தில் பிரிமீயம் தொகை செலுத்தி ஓர் ஆண்டுகள் நிறைவு பெறப்போகிறது. ஆனால் இதுவரை காப்பீட்டுக்கான தொகை வழங்கப்படவில்லை. எனவே விரைவில் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

52,915 விவசாயிகள்

தொடந்து பேசிய அதிகாரிகள், “நெல்லை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 915 விவசாயிகள் ரூ.3 கோடியே 7 லட்சம் பிரிமீயம் செலுத்தி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் அதே அளவு தொகையை செலுத்தி விட்டது. தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பணம் சில விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மீதி உள்ள விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்“ என்றனர்.

விவசாயிகள், “இதுவரை எத்தனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, மீதி உள்ள விவசாயிகளுக்கு எப்போது வழங்கப்படும். பிரிமீயம் தொகை எவ்வளவு கிடைக்கும்“ என கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகள், “நெல்லை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 5 ஆயிரத்து 411 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 61 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பயிர் நடவு செய்த விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.330 பிரிமீயம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் விரைவில் பிரிமீய தொகை வழங்கும்“ என்றார்.

அரசே வழங்க வேண்டும்

விவசாயிகள், விவசாயிகள் வழங்கிய தொகையையும், அரசு வழங்கிய தொகையையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பணம் தருகிறது. அரசே விவசாயிகளுக்கு நேரடியாக காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றனர்.

அதிகாரிகள், “இந்த விதிமுறை தமிழகம் முழுவதும் உள்ளன. அரசின் கொள்கை முடிவில் அதிகாரிகள் தலையிட முடியாது. உங்கள் கோரிக்கைகளை விவசாய சங்கம் மூலமாக மனு கொடுத்தால், அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம்“ என்றனர்.

மானூர் யூனியன் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கல்லூர் வேலாயுதம், வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இரு கரைகளிலும் நவதிருப்பதி கோவில்கள் உள்னன. அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆற்றங்கரை பகுதியில் சாலை அமைக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் பாசனப்பகுதியில் உள்ள கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய்களில் கால்நடை மற்றும் ஆற்றுப்படுகையில் பயிரிடப்பட்டு உள்ள வாழைகளை காப்பாற்ற பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலளார் ரவி தேவேந்திரன், மாநில செய்தி தொடர்பாளர் சுதாகர், நிர்வாகிகள் ராமசந்திரன், கிங் தேவேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.

கால்வாய்களை தூர்வார வேண்டும்

அந்த மனுவில், “அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை மாவட்ட கால்வாய்கள், குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்