தூத்துக்குடியில் பயங்கரம் மீனவர் வெட்டிக்கொலை மனைவி– மைத்துனரிடம் விசாரணை
தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி மற்றும் மைத்துனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி மற்றும் மைத்துனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மீனவர் கொலைதூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பி.வி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ். இவருடைய மகன் மரிய மிக்கேல் லசிங்டன் (வயது 35), மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
நேற்று அதிகாலையில், தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரின் பின்புறம் புல்தோட்டத்தில் மரிய மிக்கேல் லசிங்டன் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் அருகில் மரிய மிக்கேல் லசிங்டனின் மோட்டார் சைக்கிள் கிடந்தது. தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மரிய மிக்கேல் லசிங்டனின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–
மரிய மிக்கேல் லசிங்டனுக்கும், தூத்துக்குடி வண்ணார் 2–வது தெருவை சேர்ந்த அன்ட்ரூஸ் மகள் லூர்தம்மாள் (31) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்– மனைவி 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மரிய மிக்கேல் லசிங்டனை விட்டு பிரிந்து லூர்தம்மாள் தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே லூர்தம்மாள் வீட்டுக்கு வந்த மரிய மிக்கேல் லசிங்டன், தன்னுடைய குழந்தையை தூக்கி சென்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த லூர்தம்மாளின் அண்ணன் மேன்சன் (40) மரிய மிக்கேல் லசிங்டனுடன் தகராறு செய்து குழந்தையை மீட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சினையில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
மது குடிப்பதில் தகராறுஅதனால் மரிய மிக்கேல் லசிங்கடன் கொலை தொடர்பாக லூர்தம்மாள், அவருடைய அண்ணன் மேன்சன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் மேன்சனுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு மரிய மிக்கேல் லசிங்டன், தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் மரிய மிக்கேல் லசிங்டன் கொலை செய்யப்பட்டாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.