குடிநீர் கேட்டு பொதுமக்கள் மீண்டும் சாலை மறியல்

குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மீண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-22 08:30 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மீண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியம் செருவங்கி ஊராட்சி கார்த்திகேயபுரம் கிராமத்தில், ஒரு பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஆழ்துளை கிணறுகளில் நீர்ஆதாரம் இருந்தும் மோட்டார்களின் பழுதை சீர்செய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், இதனை சீர்செய்யக்கோரி கடந்த 10–ந் தேதி அப்பகுதி மக்கள் குடியாத்தம் – ஆம்பூர் செல்லும் சாலையில் கார்த்திகேயபுரம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.

இதனையடுத்து நேற்று காலையில் கார்த்திகேயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்–இன்ஸ்பெக்டர் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பலராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்