ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-07-20 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கீழகூத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 31). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பொன்மதி என்ற மனைவியும், விஜயமதி, தேவதர்ஷினி என்ற 2 மகளும், ஹரி என்ற ஒரு மகனும் உள்ளனர். நேற்றுமுன்தினம் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற விஜயகுமார் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இரவு மேலகூத்தங்குடி பகுதியில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான இடத்தில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, அவருடைய வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து பார்த்தபோது விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்மதி திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரில் தனது கணவரை யாரோ தலையில் அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக விஜயகுமார் கொலை செய்யப்பட்டரா? என சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்