விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுவிக்க கோரி மதுரவாயல் போலீஸ் நிலையம் முன் அடகு கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

விசாரணைக்கு அழைத்து சென்றவரை விடுவிக்க கோரி மதுரவாயல் போலீஸ் நிலையம் முன் அடகு கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-07-20 22:45 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் போலீசார், திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒரு குற்றவாளியை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், தான் திருடிய நகைகளை மாதவரம் அடுத்த மாத்தூரில் உள்ள அடகு கடையில் விற்று விட்டதாக தெரிவித்தார்.

போலீசார், அந்த குற்றவாளியுடன் அவர் அடகு வைத்ததாக கூறிய மாத்தூரில் உள்ள அடகு கடைக்கு சென்று கடை உரிமையாளர் பவர்லாலிடம் விசாரித்தனர். அந்த நபர் 1 பவுன் நகையை அடகு வைத்தார். பின்னர் அதை மீட்டு சென்று விட்டார். வேறு நகைகள் எதுவும் தன்னிடம் இல்லை என பவர்லால் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து போலீசார், அடகு கடை உரிமையாளர் பவர்லாலை மதுரவாயல் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். ஆனால் 2 நாட்கள் ஆகியும் அவரை விடுவிக்கவில்லை.

இதனால் அடகு கடை உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமையில் நேற்று மதுரவாயல் போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அடகு கடை உரிமையாளரை உடனே விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

விடுவித்தனர்

இது குறித்து த.வெள்ளையன் கூறும்போது, “குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை பிடிக்கும் போது அவர்கள் கை காட்டும் அடகு கடை உரிமையாளர்களிடம் சென்று நகைகளை போலீசார் கேட்கின்றனர். ஆனால் கடையில் இருந்து எவ்வளவு நகைகள் எடுக்கப்படுகிறது என்பதற்கான ரசீதை தருவது இல்லை. இதனால் அடகு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதே நிலை நீடித்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், பின்னர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அடகு கடை உரிமையாளர் பவர்லாலை விடுவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்