தூத்துக்குடியில் சுற்றுலா தலங்களை விரிவுபடுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

Update: 2017-07-20 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றுலா தலங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல், புதிய சுற்றுலா தலங்களை விரிவுபடுத்துதல் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், தூத்துக்குடி மாநகராட்சியில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகன நெருக்கடியை குறைக்க, வாகனம் நிற்கும் இடத்தை முறைப்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் வண்ணப்பூச்சுக்கள் பூசப்பட உள்ளது.

ரோச் பூங்கா

பொதுமக்கள் தற்போது பொழுதுபோக்கிற்காக முத்துநகர் பீச் பகுதியை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள நெருக்கடியை குறைத்திட, ரோச் பூங்கா பகுதியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு அதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் தேங்கியுள்ள மண் மற்றும் குப்பைகளை சுத்தமாக அகற்ற, நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சாலையோரங்களை மேம்படுத்தவும், புதிய பூங்காக்களை ஏற்படுத்திடவும், இடங்கள் கண்டறியப்பட உள்ளது.

குப்பைகள்

பொதுமக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டாமல் மாநகராட்சியினால் வழங்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை பயன்படுத்தவும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, அரசு அலுவலர்களோடு இணைந்து நமது தூத்துக்குடி மாநகரத்தை தூய்மையான, சுகாதாரமான, நகரமாக, மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பழனி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்