வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் புதுவை மாணவர்களுக்கு வழங்கப்படும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 22 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.;
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
வறட்சி நிவாரணம்
புதுச்சேரியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணத்தை குறுகிய காலத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மழைக்காலம் தொடங்க இருப்பதை முன்னிட்டு காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் விவசாயம் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலையில்லா நிலையை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குளம் தூர்வாருதல், பாதை அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் போன்ற பணிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்.
சென்டாக் கலந்தாய்வு
புதுவையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு இந்த வாரம் தொடங்கப்படும். விண்ணப்பித்தவர்களின் தகுதி அடிப்படையில் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பட்டியல் வெளியிடப்படும். கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழக கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலையிடாமல் இருந்தது. தற்போது முழு மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது.
கடந்த ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் பேசி அரசுக்கான இட ஒதுக்கீடாக 137 எம்.பி.பி.எஸ். இடங்களை பெற்றோம். இப்போது அந்த இடங்களை தேசிய இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு நிரப்ப உள்ளது. இதற்கான கவுன்சிலிங்கும் நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி மாநில அரசுக்கான எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 137 இடங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு இந்தியருக்கான 22 இடங்கள்
சுயநிதி மற்றும் சிறுபான்மை கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீட்டையும் தேசிய இட ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு கொண்டு சென்றுள்ளது. மீதியுள்ள 85 சதவீதத்தை மாநில அரசு இட ஒதுக்கீடாகவும், நிர்வாக இட ஒதுக்கீடாகவும் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுயநிதி மற்றும் சிறுபான்மை கல்லூரிகளில் 15 சதவீத இடத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டதைப்போல், நிகர் நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 25 சதவீத இடத்தை மாநில அரசுக்கு தர வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுகுறித்து டெலிபோனிலும் பேச உள்ளேன்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாநில அரசுக்குரிய இட ஒதுக்கீட்டை பெற அரசு தொடர்ந்து முயற்சிக்கும். நீட் தேர்வில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுவையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் எத்தனைபேர் மாநில பாடத் திட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் என்ற விவரம் என்னிடம் இல்லை. சென்டாக் குழுவிடம் தான் இருக்கும். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 22 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கே வழங்கப்படும்.
நீட் தேர்வு விவகாரம்
கல்வியில் பின்தங்கியுள்ள காரைக்கால், மாகி, ஏனாமிற்கு பிராந்திய இட ஒதுக்கீடு வழங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது பிராந்தியங்களில் கல்விச்சூழல் மாறியுள்ளதை, நீதிமன்றத்தில் தெரிவிப்போம். நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு கேட்டதை மத்திய அரசு ஏற்கவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ஏற்கவில்லை. இலவச அரிசி விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னருக்கு உரிமை உண்டு
தொடர்ந்து நாராயணசாமி அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- கவர்னரை தொகுதிக்குள் விடக்கூடாது என்று சட்டமன்றத்தில் கூறினீர்கள். ஆனால் தற்போது அவரை யாரும் தடுக்கக்கூடாது என்று கூறி உள்ளர்களே இடைப்பட்ட நாளில் என்ன நடந்தது.
பதில்:- கவர்னரை தொகுதிக்குள் வரவிடக்கூடாது என நான் கூறவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் வந்தால் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் கூறியிருந்தேன். காவல்துறை அமைச்சராக உள்ள எனக்கு சட்டம் -ஒழுங்கை காப்பாற்றும் கடமையும், பொறுப்பும் உள்ளது. புதுச்சேரி மக்கள் அமைதியை விரும்புபவர்கள். முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் போல் மாநிலத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல கவர்னருக்கு உரிமையுண்டு.
அதேசமயம் விதிகளை மீறி செயல்பட்டால் அதை தட்டிக் கேட்கும் கடமை புதுச்சேரி மக்களுக்கு உள்ளது. அனைவரும் அவரவர் அதிகார எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.