சமூக பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில் ரஜினியுடன் கமலை ஒப்பிடமுடியாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சமூக பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில் ரஜினியையும், கமலையும் ஒப்பிடமுடியாது என்று சேலத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2017-07-19 23:30 GMT

சேலம்,

பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ், கடந்த 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் 19–ந் தேதி சேலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது 4–ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் கொலை செய்யப்பட்ட சேலம் மரவனேரி 2–வது குறுக்குத்தெரு பகுதியில் ஆடிட்டர் ரமேஷ் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷ் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:–

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த வழக்கு விசாரணை கூட இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய வி‌ஷயம். அவரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.

தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறதோ? என்ற அச்சம் சமீபகாலமாக தோன்றுகிறது. அதற்கு காரணம், வடமாநில தீவிரவாதிகள் 5 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வி‌ஷயத்தில் தமிழக முதல்–அமைச்சர் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் வளர்மதி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். அவரை பற்றி விசாரிக்க வேண்டும். தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் தற்போது நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. சசிகலா சிறையில் சொகுசாக வாழ்க்கை நடத்துகிறார். இதன்மூலம் சிறையிலும் ஊழல் நடப்பது அம்பலமாகி உள்ளது. பெங்களூரு சிறையில் லஞ்ச விவகாரம் மற்றும் விதிமுறை மீறல் உள்ளிட்டவைகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும். கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் உள்ளது.

இதுவரை சமுதாயம் சார்ந்த எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத கமல் திடீரென்று அரசியல் பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர் களத்தில் இருந்து தனது கருத்துக்களையும், சமூக பிரச்சினைகளை பற்றியும் பேசலாம். அதைவிட்டு இணையதளத்தில் பேச வேண்டாம். இதுவரை வாய் திறக்காத கமல் இப்போது கருத்து தெரிவிப்பது ஏன்?. சமுதாய உணர்வு அவருக்கு எங்கே போனது?. நடிகர் ரஜினி 1996–ல் ஆட்சி மாற்றத்திற்காக குரல் கொடுத்தார். அதன்பிறகு ஊழலுக்கு எதிராகவும், நதிநீர் பிரச்சினை மற்றும் அரசியல் விமர்சனங்களை பேசியும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். சமூக பிரச்சினைக்கு குரல் கொடுப்பதில் ரஜினியுடன், கமலை ஒரே நேர்கோட்டில் ஒப்பிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்