கோடம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், கார் மோதி பலி

கோடம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் கார் மோதி பலியானார். படுகாயம் அடைந்த அவரது நண்பர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2017-07-20 03:45 GMT
சென்னை,

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். இவரது மகன் நவதேஜா (வயது 18). காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நவதேஜா தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் ஜாலியாக உலா வருவார் என்றும், சில நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் பந்தயம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நவதேஜா தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட திட்டமிட்டார். அதன்படி, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோட்டில் இருந்து வடபழனி 100 அடி சாலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் ரங்கராஜபுரத்தை வந்தடைய வேண்டும் என்பது பந்தயத்தின் இலக்கு தூரமாக கணக்கிடப்பட்டது.

இதற்காக நவதேஜா தனது நண்பர் விக்கி என்கிற விக்னேஷ் (18) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்தார். மற்ற 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் தயாராக இருந்தனர். விசில் அடிக்கப்பட்டதும் மின்னல் வேகத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் சீறியபடி புறப்பட்டன.

கார் மோதி பலி

விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டை தாண்டி ஸ்ரீகிருஷ்ணபுரம் வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை மோட்டார் சைக்கிள்கள் வந்தடைந்தன. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போட்டிபோட்டு சென்றபோது, ஒரு மாநகர பஸ்சும் அதே வழியில் பயணித்தது.

அப்போது நவதேஜா பஸ்சை முந்தி செல்ல முயற்சி செய்து திரும்பியபோது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நவதேஜாவும், விக்னேசும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த நவதேஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் விக்னேஷ் உயிருக்கு போராடியபடி துடித்துக்கொண்டு இருந்தார்.

நண்பர் கவலைக்கிடம்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் நவதேஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயம் அடைந்த விக்னேஷ் சென்னை அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மவுலிவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. 

மேலும் செய்திகள்