அமைச்சர் வளர்மதியை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்

தேனியில் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதியை கண்டித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-07-19 22:30 GMT

தேனி,

பிரமலை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த மக்களை பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கக்கோரி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சட்டசபையில் சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி அவர்களின் கோரிக்கையை கேலி செய்யும் விதமாக பேசியதாக தெரிகிறது.

இதனை கண்டித்து தேனியில் நேரு சிலை முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். அப்போது அமைச்சர் வளர்மதிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அமைச்சரின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். உடனே போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேனியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்