நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் 30 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 30 அடியை எட்டியது.

Update: 2017-07-19 22:05 GMT

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 2016–ம் ஆண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. அதே போல் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. தேனி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு இதுவரை பெய்யவில்லை.

ஆனால் கடந்த மாத இறுதியில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஓரளவு பெய்த மழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 29.92 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து மதுரை மாநகரம் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 364 மில்லியன் கனஅடியாக இருந்தது.

இந்த மாத தொடக்கத்தில் 23 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 30 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்யவில்லையென்றால் வைகை அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் இனிவரும் நாட்களில் மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்