கியாஸ் மூலம் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை டீசல் ஆட்டோவாக மாற்றக்கூடாது மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கியாஸ் மூலம் இயங்கும் ஷேர் ஆட்டோக்களை டீசல் ஆட்டோக்களாக மாற்றக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை புதூரை சேர்ந்த பால்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை மாநகரில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் நினைத்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும், இறக்கி வருகின்றனர். பஸ் நிறுத்தங்களை பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்து கொள்ளும் இந்த ஷேர் ஆட்டோக்கள் சாலைகளில் வேகமாக சென்று கொண்டு இருக்கும்போது திடீரென நிறுத்துவதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன.
மேலும் இந்த ஆட்டோக்களில் 3 பேர் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற விதிகள் இருந்தும், ஏராளமானவர்களை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்கிறார்கள். மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வகையில் எல்.பி.ஜி. கியாஸ் நிரப்பி ஓட்டப்படும் ஆட்டோக்களை டீசல் மூலம் இயங்குபவையாக மாற்றப்படுகின்றன.
இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. 14.8.2015 முதல் புதிய டீசல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில எல்.பி.ஜி. ஆட்டோக்களை டீசல் மூலம் இயங்குபவைகளாக மாற்ற வட்டார போக்குவரத்து அவலகங்களில் அனுமதிக்கப்படுகிறது.
இதன்காரணமாக டீசல் ஆட்டோக்களில் இருந்து வெளிவரும் நச்சுப்புகையானது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வர காரணமாக உள்ளன. எனவே கியாஸ் மூலம் இயங்கும் ஆட்டோக்களை டீசல் ஆட்டோக்களாக மாற்றி லைசென்சு வழங்குவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், கியாஸ் ஆட்டோக்களை டீசல் மூலம் இயங்குபவைகளாக மாற்றக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.