டி.ஐ.ஜி. ரூபா பணி இடமாற்றத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன சித்தராமையா குற்றச்சாட்டு

டி.ஐ.ஜி. ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.;

Update:2017-07-20 02:30 IST

பெங்களூரு,

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட விவகாரத்தில் டி.ஐ.ஜி. ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

தனி கொடியை உருவாக்குவது...

கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற கர்நாடகத்தை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கர்நாடகத்திற்கு தனி கொடியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சாதக–பாதகங்களை ஆராய்ந்து பார்த்து அரசுக்கு அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்கும். மாநிலம் தனி கொடியை வைத்துக்கொள்ளக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்லவில்லை.

கர்நாடக கீதம்

தேசிய கொடி உயரமாக பறக்கும். அதற்கு கீழ் கர்நாடக கொடி பறக்கும். தேசிய கீதத்தை போல் கர்நாடக கீதமும் பாடப்படுகிறது. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாநிலங்கள் தனி கொடியை வைத்துக்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டும் தெளிவாக எதையும் சொல்லவில்லை. அரசியல் நோக்கத்திற்காக பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மாநில கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

மகதாயி நதிநீர் பிரச்சினையில் நான் கோவா முதல்–மந்திரிக்கு கடிதம் எழுதினேன். அதற்கு கோவா நீர்வளத்துறை மந்திரி எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘டர்டி‘(மோசமான) என்ற ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சரியல்ல. மகதாயி நதிநீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் நல்லிணக்கத்துடன் தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் நாங்கள் கடிதம் எழுதினோம்.

கூட்டுறவு மிக முக்கியம்

கூட்டாட்சி தத்துவத்தில் பரஸ்பர கூட்டுறவு மிக முக்கியம். இதுபற்றி பலமுறை நாங்கள் கோவாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். ஆனால் அவர்கள் இவ்வாறு பொறுப்பு இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்துவது ஏற்கக்கூடியது அல்ல. இந்த பிரச்சினையில் பிரதமர் தலையிடுமாறு நான் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். மீண்டும் ஒரு முறை பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். பா.ஜனதாவினர் டெல்லிக்கு போய் பிரதமரிடம் எடுத்துக்கூறி இந்த பிரச்சினையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டும்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் டி.ஐ.ஜி. ரூபா பணிஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் எதிர்க்கட்சிகள் தேவை இல்லாமல் அரசியல் செய்கின்றன. அரசு அதிகாரிகளை எதிர்க்கட்சி தலைவர்களிடம் கேட்டுத்தான் பணி இடமாற்றம் செய்ய வேண்டுமா?.

ஏரிகளுக்கான குணங்களை...

போலீசாருக்கு ஒழுக்கம் மிக முக்கியம். இந்த விவகாரத்தில் 2 அதிகாரிகளையும் பணி இடமாற்றம் செய்துள்ளோம். கர்நாடகத்தில் ஏரிகளுக்கான குணங்களை முழுமையாக இழந்த ஏரிகளை பாதுகாக்க சாத்தியம் இல்லை. அதனால் அத்தகைய ஏரிகளை அரசாணையில் இருந்து நீக்கியுள்ளோம். இதில் வேறு நோக்கம் எதுவும் இல்லை. இந்த வி‌ஷயத்தில் அரசை குறை கூறுவது சரியல்ல.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்