தஞ்சையில் பெண் மீது மோதியதால் தனியார் பஸ் சிறைபிடிப்பு
தஞ்சையில் பெண் மீது தனியார் பஸ் மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் தஞ்சையில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் புறவழிச்சாலை வழியாக தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று வருகின்றன.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதிகளில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் தனியார் பஸ்கள், நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை, அண்ணாநகர், யாகப்பாநகர் வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு தனியார் பஸ் வந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண் மீது பஸ் மோதியது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெண் மீது பஸ் மோதிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தனியார் பஸ்சை சிறைபிடித்தனர். அப்போது பொதுமக்கள், சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் பஸ்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த பஸ்கள் வேகமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க வேண்டும் என கூறினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.