3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்–அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்–அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-07-19 22:15 GMT

நாகப்பட்டினம்,

ஆசிரியர்–அரசு அலுவலர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ–ஜியோ) அமைப்பு சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு பணியாளர் சங்க மாநில துணை தலைவர் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் ரவி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் அந்துவன்சேரல், தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழக அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் படிகளை வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் கணேசன், அரசு பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அறவாழி, உயர்நிலைபள்ளி, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர்அசோக்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி, உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் கழக மாவட்ட தலைவர் செல்வகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்