கோவில்பட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் நர்சிடம் தாலி சங்கிலி பறிப்பு

கோவில்பட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் நர்சிடம் 4 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-07-19 20:45 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே அங்கன்வாடி மையத்தில் நர்சிடம் 4 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம்...

கோவில்பட்டி இனாம் மணியாச்சி காளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இவருடைய மனைவி ஆதிலட்சுமி (35). இவர் கோவில்பட்டி அருகே வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று காலையில் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் வி.பி.சிந்தன் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார். அங்கன்வாடி மையத்துக்கு சென்றதும், ஆதிலட்சுமி ஸ்கூட்டரை நிறுத்தினார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று ஆதிலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.

போலீசார் விசாரணை

உடனே ஆதிலட்சுமி கைகளால் தங்க சங்கிலியை இறுக பிடித்து கொண்டு கூச்சலிட்டவாறு போராடினார். இதில் தங்க சங்கிலி 2 துண்டாக அறுந்தது. அந்த வாலிபர்களிடம் 4 பவுன் தங்க சங்கிலியும், ஆதிலட்சுமியிடம் 1½ பவுன் தங்க சங்கிலியும் இருந்தது. அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், கையில் கிடைத்த 4 பவுன் தங்க சங்கிலியுடன் 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து, நர்சிடம் தங்க சங்கிலி பறித்த மர்மநபர்களை தேடி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் பெத்தேல் விடுதி அருகில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 மர்மநபர்கள் 7 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து சென்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நாலாட்டின்புத்தூரில் அதிகாலையில் கோலம் போட்ட பெண்ணிடம் 10 பவுன் தங்க தாலி சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றார். எனவே பெண்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்