சுகாதார ஆய்வாளர் உள்பட போலி டாக்டர்கள் 2 பேர் கைது

திருவண்ணாமலை அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் உள்பட போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-07-19 21:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் உள்பட போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கிளினிக்குகளில் இருந்து மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 66). திருவண்ணாமலையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதேபோல திருவண்ணாமலை அருகே உள்ள நொச்சிமலை பகுதியை சேர்ந்த நடராஜன் (44) என்பவர் பி.ஏ. படித்துவிட்டு, அந்த பகுதியில் கிளினிக் வைத்து கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த மு.வடநேரேவிற்கு புகார்கள் சென்றன. புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கிரிஜாவிற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் கிரிஜா தலைமையில், மருந்தாளுனர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று 2 கிளினிக்குகளில் சோதனை செய்தனர். அப்போது இருவரும் டாக்டருக்கு படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து கிளினிக்குகளில் இருந்த மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்