பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் தரமற்ற பூச்சி மருந்துகள் வினியோகம்?

பழனி அருகே உள்ள ஆயக்குடி, மானூர், கலிக்கநாயக்கன்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு வளர்ப்பு தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது.

Update: 2017-07-19 12:40 GMT
திண்டுக்கல்,

பழனி அருகே உள்ள ஆயக்குடி, மானூர், கலிக்கநாயக்கன்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு வளர்ப்பு தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மல்பெரி செடிகளை பயிரிட்டுள்ளனர். அரசு மானியம் மூலம் பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, உரம், பூச்சி மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திண்டுக்கல் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று பழனி வட்டார விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டன. அதனை வாங்கி விவசாயிகள் சோதனை செய்தபோது, அவை தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும், தரமான பூச்சி மருந்து வழங்கும் வரை உரம் உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கமாட்டோம் என்று கூறிவிட்டு புறப்பட்டனர். சில விவசாயிகள் மட்டும் உரம், பூச்சி மருந்தை வாங்கி சென்றுவிட்டனர். இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு கொடுக்கப்படும் பூச்சி மருந்தை தான் நாங்கள் வழங்கி உள்ளோம். அதில் உள்ள குறைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்