திருமானூர் அருகே தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சாம்பல்

திருமானூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து சாம்பலாயின.;

Update:2017-07-19 02:45 IST

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள அன்னிமங்கலம் காலனித்தெருவை சேர்ந்தவர் கரிகாலன். இவர் அப்பகுதியில் இருந்த வீட்டின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று காலை இவருடைய குடும்பத்தினர் உள்பட அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்வதற்காக சென்று விட்டனர்.

இந்நிலையில் காலை 11 மணியளவில் எதிர்பாராதவிதமாக கரிகாலனின் வீடு தீப்பிடித்து எரிந்தது. காற்றின் காரணமாக அருகில் இருந்த 3 வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் தீ பரவியதில் அருகில் இருந்த தென்னை மரம் உள்ளிட்ட சில மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருவையாறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் கரிகாலன் மற்றும் கோவிந்தராஜ்(வயது 40), அரிசங்கர்(35), தர்மராஜ்(45) ஆகியோருடைய வீடுகள் எரிந்து சாம்பலாயின. மேலும் தர்மராஜ் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் அனைவரது வீடுகளிலும் இருந்த குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள், அரசு சான்றிதழ்கள், உணவு பொருட்கள், உடைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகின.

வீடுகளின் அருகே இருந்த மாட்டு கொட்டகைகளும் தீயில் எரிந்து சாம்பாலாயின. மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பின என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்தின்போது அருகே இருந்த மின்கம்பத்தில் வயர்கள் தீப்பிடித்து இளகியதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் மோகனராஜன், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் அங்கு வந்து தீ விபத்தில் வீடுகளை பறிகொடுத்த 4 குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, அரசு சான்றிதழ்கள் மற்றும் அரசு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் வீடுகளை இழந்த 4 குடும்பத்தினரையும் சேவை மையம் மற்றும் பள்ளிகளில் தங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார், தீயில் எரிந்த வீடுகளை பார்வையிட்டு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்