மாவட்டம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் விடுதிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் நடவடிக்கை

மாவட்டம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் விடுதிகளுக்கு உரிமம் பெறாமல் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Update: 2017-07-18 21:45 GMT

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனம், பள்ளி, கல்லூரிகள், தனியார், மத நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற இன்ன பிற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள், இல்லங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குபடுத்துதல்) விதிகள் 2015–ன்படி பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து பதிவு செய்து, அதற்கான உரிமத்தை பெற வேண்டும். அதேபோல், புதிதாக குழந்தைகள் இல்லங்கள், விடுதிகள் தொடங்கினால் மாவட்ட கலெக்டரிடம் அங்கீகாரம் பெற்ற பின்னரே தொடங்க வேண்டும். வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தால், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் பிரிவு 12–ன் கீழ் மாவட்ட கலெக்டரிடம் 6 மாதத்திற்குள் விண்ணப்பித்து உரிய பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறையை பின்பற்றி, உரிய உரிமம் வாங்காத விடுதிகள், இல்லங்கள் மீது போலீஸ் துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும். இதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2–வது முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே, இதுவரை பதிவு செய்யாத, உரிமம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், விடுதிகள் நடத்துவோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பெண்கள் விடுதிகள், இல்லங்கள் தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்