குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ததால் பாதிப்பா? ‘‘கோமா’’ நிலைக்கு ஆளான 2–ம் வகுப்பு மாணவி

இளம்பிள்ளை அருகே ‘‘கோமா‘‘ நிலைக்கு 2–ம் வகுப்பு மாணவி ஆளானார். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அரசு பள்ளியை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-07-18 22:30 GMT

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி கிராமம் அஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன், தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு 4 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் 4–வது பெண் குழந்தை கண்மணி(வயது 7). இவள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த மாதம் இந்த பள்ளியில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது குடிநீர் தொட்டிக்குள் கண்மணி இறங்கி சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. அன்றைய தினமே திடீரென அவளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் மகளை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்மணிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவளுடைய உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கண்மணி சென்னையில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் கண்மணிக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான சிகிச்சையை அவளுக்கு டாக்டர்கள் அளித்து வந்தனர். இந்தநிலையில் திடீரென ஆஸ்பத்திரியில் கண்மணி ‘‘கோமா‘‘ நிலைக்கு ஆளானாள். இதுபற்றி தெரியவந்ததும் பெரியண்ணன் தனது மகளை டாக்டர்களால் காப்பாற்ற முடியாது என எண்ணி கண்மணியை சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

குடிநீர் தொட்டி சுத்தம் செய்ததை தொடர்ந்து தான் கண்மணி இந்த நிலைக்கு ஆளானதாக கூறி நேற்று அந்த பள்ளியை அவளுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மகுடஞ்சாவடி போலீசார் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பிரேம் ஆனந்த் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே, கோமா நிலைக்கு ஆளான கண்மணியை உறவினர்கள் அங்கு அழைத்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் உறவினர்கள், சிறுமியை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், சிறுமியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து மேல்சிகிச்சை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். ஆனால் இதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு கண்மணியை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்