குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 8–ம் நாள் கொடை விழா

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 8–ம் நாள் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2017-07-18 20:45 GMT

தென்திருப்பேரை,

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் 8–ம் நாள் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

8–ம் நாள் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த 9–ந்தேதி தொடங்கி, 10 நாட்கள் நடந்தது. விழாவின் சிகர நாளான கடந்த 11–ந்தேதி ஆனி கொடை விழா நடந்தது. தங்க திருமேனி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர்.

விழாவின் நிறைவு நாளான நேற்று 8–ம் நாள் கொடை விழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, நித்ய பூஜை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

காலை 11.30 மணிக்கு நாராயணர்– பாமா, ருக்மணி அம்பாள்களுடன் தீர்த்தவாரிக்கு புறப்பட்டார். தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர் நாராயணர்– பாமா, ருக்மணி அம்பாள்களுடன் வீதி உலா சென்று, மீண்டும் கோவிலை சேர்ந்தார். ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் சாத்தி சுவாமியை வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் மாவிளக்கு பார்த்தல், வென்னீர் கொழுக்கட்டையை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.

விழாவில் சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்க தலைவர் முத்துமாலை, துணை தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெரியசாமி, துணை செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் ராஜேந்திரன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜெகதீசன், தொழில் அதிபர்கள் சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், குமரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வராஜ், ஜெயந்தி அன்பழகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் அஜித், உதவி ஆணையரும் தக்காருமான அன்னக்கொடி, தூத்துக்குடி அறநிலையத் துறை அலுவலர் சிவராம் பிரபு, கோவில் ஆய்வாளர் பகவதி, குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர், கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்