பெங்களூரு சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா அதிரடியாக இடமாற்றம்

பெங்களூரு சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2017-07-17 23:13 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அவருக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் கூறப்பட்டன.

பெண் அதிகாரி

இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரூபா நியமிக்கப்பட்டார். ரூபா, கடந்த 10-ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கைதிகளிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சசிகலாவுக்கு தனி சமையலறை அமைத்து கொடுத்திருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சசிகலாவுக்கு சில சிறப்பு வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதும் அதிகாரி ரூபாவின் கவனத்திற்கு வந்தது.

பரபரப்பு

குற்றச்சாட்டு

இதுதொடர்பாக அதிகாரி ரூபா, விவரமாக ஒரு அறிக்கையை தயாரித்து கடந்த 12-ந் தேதி சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே.தத்தா ஆகியோருக்கு அனுப்பிவைத்தார். இதில் சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சசிகலாவிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

இது சசிகலா சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், தமிழ்நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயர்மட்ட விசாரணை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடைபெறுவதாக கூறப்படும் முறைகேடு புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீஸ் அதிகாரிகள் சத்தியநாராயணராவ் மற்றும் ரூபா ஆகிய 2 பேரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இடமாற்றம்

இந்த பரபரப்பான சூழலில் சிறைத்துறை அதிகாரி சத்தியநாராயணராவை பணியில் இருந்து விடுவித்தும், ரூபாவை பணி இடமாற்றம் செய்தும் கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

அதாவது, சசிகலாவிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த பணியும் ஒதுக்கப்படவில்லை. அவருடைய பணி காலம் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக, ஊழல் தடுப்பு படை கூடுதல் டி.ஜி.பி. என்.எஸ்.மேகரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி. ரூபாவை பணி இடமாற்றம் செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்