புதுச்சேரியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 2½ மணி நேரத்தில் முடிவடைந்தது

புதுவையில் ஜனாதிபதிக்கான தேர்தலில் 2½ மணிநேரத்தில் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் உள்பட எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர்.

Update: 2017-07-17 22:30 GMT
புதுச்சேரி,

புதுவையில் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக ஏற்கனவே கொண்டு வரப்பட்டு இருந்த ஓட்டுப்பெட்டி மற்றும் ஓட்டுச்சீட்டுகள் போன்றவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

அந்த அறை தேர்தல் பார்வையாளர் அருண்குமார் யாதவ், புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, உதவி தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான வின்சென்ட்ராயர், பாரதீய ஜனதா கட்சி வேட்பாளரின் ஏஜெண்டுகளான அன்பழகன் எம்.எல்.ஏ., பக்தவச்சலம், காங்கிரஸ் வேட்பாளரின் ஏஜெண்டான லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட கமிட்டி அறைக்கு அவை கொண்டுவரப்பட்டன.

அங்கு ஓட்டுப்பெட்டி தேர்தல் ஏஜெண்டுகளிடம் திறந்து காண்பிக்கப்பட்டு பின்னர் பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. இதன்பின் காலை 10 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல் ஆளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஓட்டுப்போட்டார். அதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கம், அவரை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஓட்டு போட்டனர்.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், தனவேலு, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் சிவா, கீதா ஆனந்தன் ஆகியோர் ஓட்டுப் போட்டனர்.

அவர்களை தொடர்ந்து தனியாக வந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் வாக்குப் பதிவு செய்தார். பின்னர் பகல் 11.30 மணி அளவில் மாகி தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஓட்டுப்போட்டார். அவரை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது காரில் அழைத்து வந்திருந்தார்.

அதன்பின் 12.25 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தனது கட்சி எம்.எல்.ஏ.க்களான என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அசோக் ஆனந்து, சுகுமாரன், கோபிகா, சந்திர பிரியங்கா ஆகியோருடன் வந்து ஓட்டுப்போட்டார். புதுவையில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் அனைத்தும் பகல் 12.35 மணிக்குள் பதிவாகிவிட்டன. இருந்தபோதிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாலை 5 மணிவரை ஓட்டுப்பெட்டி அங்கேயே வைக்கப்பட்டிருந்தது.

அதன்பின் தேர்தல் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து அந்த ஓட்டுப்பெட்டி விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

புதுவையைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் டெல்லியில் ஓட்டுப்போட்டனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்ததையொட்டி புதுவை சட்டமன்ற வளாகம் முழுவதும் தேர்தல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. தேர்தல்துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்து இருந்தவர்கள் மட்டுமே நேற்று அனுமதிக்கப்பட்டனர். சட்டமன்ற ஊழியர்கள் உள்பட வேறு யாரும் சட்டமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்