சூனாம்பேடு ஊராட்சியில் மத்திய குழுவினர் ஆய்வு
டெல்லியில் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அதிகாரிகள் 3 பேர் நேற்று சூனாம்பேடு ஊராட்சிக்கு வருகை புரிந்தனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூனாம்பேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தமிழகத்திலேயே அதிகப்படியாக ரூ.4¼ கோடி கூலி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அதிகாரிகள் 3 பேர் நேற்று சூனாம்பேடு ஊராட்சிக்கு வருகை புரிந்தனர். அங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக கூலிகள் வழங்கிய பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி, தனிநபர் கழிவறை, திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது காஞ்சீபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயகுமார், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.