கடன் தொல்லையால் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்
குறிஞ்சிப்பாடி அருகே கடன் தொல்லையால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண், தனது 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குறிஞ்சிப்பாடி
கடலூர் முதுநகர் அருகே உள்ள கோதண்டராமபுரம் புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடலூரில் ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய 2–வது மனைவி சாய்பாபு(வயது 35). இவர்களுக்கு கோஷன் பிரியன்(8), கோகுலன்(6) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
தொண்டமாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கோஷன்பிரியன் 3–ம் வகுப்பும், அதே பள்ளியில் கோகுலன் 2–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் இறந்துவிட்டார். இதனால் சாய்பாபு புதுக்குளத்தில் இருந்த வீட்டில் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
கணவர் இறந்தபிறகு குழந்தைகளை வளர்ப்பதற்கும், குடும்ப செலவுக்கும் பணம் இல்லாமல் சாய்பாபு சிரமமடைந்து வந்தார். இதையடுத்து, அப்பகுதியில் அவர் கூலிவேலைக்கு சென்று தனது மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்.
இருப்பினும், அவர் சம்பாதிக்கும் பணம் செலவுக்கு போதுமானதாகவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் சாய்பாபுவிடம் கேட்டுவந்தனர். இதனால், அவர் குடும்ப செலவுக்கும் பணம் இல்லையே, வாங்கிய கடனையும் திரும்ப செலுத்த முடியவில்லையே என்று மனவேதனை அடைந்தார். மேலும், கடன் தொல்லையால் அவ்வப்போது தனது மகன்கள் முன்பு அவமானம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாய்பாபு தனது மகன்களுடன் குள்ளஞ்சாவடி அருகே திம்மராவுத்தங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார். இந்த நிலையில், நேற்று காலை சாய்பாபு, பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, கோகுலன், கோஷன்பிரியன் ஆகியோரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
இந்த நிலையில், அவர் அதே பகுதியில் தர்மதுரை என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த கிணற்றை பார்த்தார். அப்போது, கடன் தொல்லையால் வாழ்வதைவிட மகன்களுடன் சாவதே மேல் என்று நினைத்து, அந்த கிணற்றின் அருகே தனது மகன்களை அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர், திடீரென தனது மகன்கள் 2 பேரையும் கிணற்றில் தூக்கி வீசி விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள கிணற்றுக்குள் குதித்தார்.
இதில் சிறுவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டனர். ஆனால், சாய்பாபு கிணற்றின் ஓரத்தில் இருந்த ஒரு கல்லை பிடித்துக் கொண்டு உயிருக்கு பயந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதில் நீச்சல் தெரிந்த சிலர் கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த சாய்பாபுவை மீட்டனர். தொடர்ந்து, அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். அப்போது, சாய்பாபு தனது மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதார்.
இதுபற்றி தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்து போன கோகுலன், கோஷன்பிரியன் ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.