உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருப்பூர்,
வர்த்தக நகரமான திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் திருப்பூரி தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். திருப்பூருக்குட்பட்ட பகுதியில் பலதரப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருவதால் பிற பகுதிகளில் உள்ள குற்றவாளிகள் இங்கு மறைந்து கொள்ள வாய்ப்பான இடமாக மாறி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தீவிரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய பலரை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வரும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும், உரிய ஆவணங்கள் பெற்ற பின்னரே அவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும், தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர் அமைப்புகள் முன்வைத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நிறுவனங்களில் ஏற்படும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது இடைத்தரகர்கள் பலர் வெளிமாநிலங்களில் உள்ளவர்களை திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்காக அழைத்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் வளையங்காடு பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் உரிய ஆவணங்கள் இன்றி வேலை செய்து வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த குறிப்பிட்ட 6 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த முகமது சாருக்(வயது 28), ரோஷன் மிலா சர்தர்(21), தலுவார் உசேன்(28), பாபு(27), மம்னூ(22), ஹாசிக்(20) என்பதும், இதில் தலுவார் உசேனை தவிர மற்ற 5 பேருக்கும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் யாசின் காஜா. இவர் திருப்பூர் வளையங்காட்டில் தங்கி இருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களை ஒப்பந்தத்திற்கு பணியமர்த்தும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் திருப்பூரில் தங்கி இருந்து வடமாநிலத்தை சேர்ந்த அஜய் என்ற நபர் யாசின் காஜாவை தொடர்பு கொண்டு தன்னிடம் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளும் படியும் கேட்டு கொண்டுள்ளார். இதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தை சேர்ந்த இந்த 6 பேரும் திருப்பூர் வந்துள்ளனர்.
இங்கு ராம்நகரில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக இந்த 6 பேரிடமும் யாசின் காஜா ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் தலுவார் உசேனை தவிர மற்ற 5 பேரும் தங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும், தங்களுக்கு தேவையான ஆவணங்களை தயாரித்து கொடுக்கும் படியும், இதற்காக உரிய பணம் கொடுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த யாசின்காஜா, அந்த 6 பேர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரிலேயே இந்த 6 பேரில் ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரிடம் இருந்து போலி ஆதார் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. மேலும், இவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்த அஜய் என்ற நபரை தேடிசென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்களா? இவர்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தார்கள்? இவர்களை யார் அழைத்து வந்தனர்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.