வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்ததாக ராணுவ வீரர் மீது புகார்

வரதட்சணை கேட்டு மகளை கொலை செய்துவிட்டதாக அவருடை£ய பெற்றோர், ராணுவவீரர் மீது குறைதீர்வு கூட்டத்தில் புகார்மனு கொடுத்துள்ளனர்.

Update: 2017-07-17 22:00 GMT

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 450 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

அணைக்கட்டு, ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி செல்வி அவர்களது மூத்த மகள் ரஞ்சினியின் 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்களது மூத்த மகள் ரஞ்சினி (வயது 28). இவருக்கும் குடியாத்தம் கல்லப்பாடி பகுதி கே.வலசை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் ராணுவவீரரான பெருமாள் என்பவருக்கும் 2010–ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தோம். இவர்களுக்கு கனீஷ் (5) என்ற மகனும் தனுஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் எனது மகளை பெருமாள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி ரஞ்சினி எங்களுக்கு போன் செய்தார். அப்போது எனது கணவர் என்னை கொலை செய்துவிடும் நோக்கத்தில் அடிக்கிறார். என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

இதனால் நாங்கள் பதறிப்போய் பெருமாள் வீட்டிற்கு செல்ல தயாரானோம். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெருமாளின் உறவினர்கள் ரஞ்சினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது எனது மகளின் உடலை தரையில் கிடத்தியிருந்தனர். மேலும் ரஞ்சினி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். இதுகுறித்து பரதராமி போலீசில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை பெருமாள் மீதோ, அவரின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் மீதோ நடவடிக்கை எடுக்கவில்லை.

எங்கள் மகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெமிலி தாலுகா துறையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்களது கிராமம் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. எங்கள் கிராமத்திற்கும் அருகில் உள்ள நெடும்புலி கிராமத்திற்கும் இடையே உள்ள சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக மதுபானம் விற்கப்படுகிறது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த குடிமகன்கள் இங்கு வந்து குடிக்கின்றனர். இந்த சாலை வழியாக பனப்பாக்கம் பள்ளிக்கு மாணவிகள் செல்ல அச்சப்படுகின்றனர். டாஸ்மாக் கடைதிறக்கப்பட்டதால் நாளுக்குநாள் இந்த சாலையில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது. எனவே டாஸ்மாக் கடையை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரக்கோணம் தாலுகா மின்னல் நரசிங்கபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்கக்கோரி சில ஆண்டுகளாக மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் போது பொதுமக்களுக்கு 104 மருத்துவ உதவி எண் குறித்த விழிப்புணர்வு அரங்கம் மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரங்கம் அமைத்திருந்தனர். அதில் இயற்கை உரங்கள் விலைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.

கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்